போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை இணையவழியில் செலுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘Gov Pay’ அமைப்பைப் போன்று போலி இணையதளங்களை உருவாக்கி, பொதுமக்களின் பணம் மற்றும் முக்கியமான தகவல்களைத் திருடும் மோசடி இடம்பெற்று வருவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
இந்த போலி இணையதளங்களுக்கான இணைப்புகள் குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் WhatsApp ஊடாக பொதுமக்களின் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அனுப்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘Gov Pay’ மூலம் போக்குவரத்து அபராதங்களை செலுத்துவதற்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தைத் தவிர வேறு எந்த இணையதளமும் இல்லை என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.
எனவே, சந்தேகத்திற்கிடமான இணைப்புகளைத் திறக்கவோ, அதில் வங்கி அல்லது தனிப்பட்ட தகவல்களைப் பதிவு செய்யவோ வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனாதீர பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.








