நீர்ப்பாசனக் கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதுடன், தேசிய பொருளாதாரத்திற்கு அவர்களின் பங்களிப்பை அதிகரிக்க முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
ரஜரட்ட பாரிய நீர்ப்பாசனக் கட்டமைப்புடன் இணைக்கப்படவுள்ள கீழ் மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றம் மற்றும் திட்டத்தை முன்னெடுப்பதில் நிலவும் தடைகள் தொடர்பில் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் நிதி ஒதுக்கீடு இல்லாத காரணத்தால் இடைநிறுத்தப்பட்டிருந்த நிலையில், 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் திட்டத்தை மீள ஆரம்பிப்பதற்காக 5,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
கீழ் மல்வத்து ஓயா பிரதேசத்தில் நிலவும் நீர்ப்பற்றாக்குறையைத் தீர்ப்பதுடன், விவசாய உற்பத்தியை அதிகரித்து கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவது திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.
இதன் கீழ் தந்திரிமலைப் பகுதியில் புதிய அபிவிருத்திப் பகுதியை உருவாக்குதல், மன்னார் மாவட்டத்தில் சுமார் 40,000 ஏக்கர் வயல் நிலங்களில் சிறுபோக மற்றும் பெரும்போக பயிர்ச்செய்கையை விரிவுபடுத்துதல், குடிநீர் வழங்குதல், நீர்மின் உற்பத்தி, வெள்ளக் கட்டுப்பாடு, சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
மேலும், மனித – யானை மோதலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள், காணி கையகப்படுத்தல் மற்றும் மீள்குடியேற்றப் பணிகள் குறித்தும் கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
மீள்குடியேற்றப்படும் மக்களுக்கு முன்னைய வாழ்க்கைத் தரத்தை விட சிறந்த வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதுடன், நவீன விவசாயத் திட்டங்களை அறிமுகப்படுத்தி, அவர்களின் உற்பத்திகளுக்கு நிலையான சந்தை வாய்ப்புகளை உருவாக்குமாறும் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
கீழ் மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை 2029–2030ஆம் ஆண்டளவில் முழுமையாக நிறைவு செய்து மக்களிடம் கையளிப்பதே அரசாங்கத்தின் இலக்காகும். நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், இது வடமத்திய மாகாணத்தின் மிகப்பெரிய நீர்த்தேக்கமாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, பொருளாதார நெருக்கடி காரணமாக இடைநிறுத்தப்பட்டுள்ள ‘குடா விலச்சி வாவித் திட்டம்’ உள்ளிட்ட சிறிய மற்றும் நடுத்தர அளவிலான குளங்களை புனரமைப்பது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
திட்டம் ரஜரட்ட மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு என தெரிவித்த தந்திரிமலை ரஜமகா விகாரையின் விகாராதிபதி வண. தந்திரிமலை சந்தரதன தேரர், திட்டத்தை முன்னெடுப்பதில் அரசாங்கம் காட்டும் அர்ப்பணிப்பைப் பாராட்டியுள்ளார்.







