காங்கேசன்துறை துறைமுகம் ஊடாக கப்பலில் இந்தியாவின் நாகப்பட்டினம் சென்ற 13 பேர், அதிகாரிகளால் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.
காங்கேசன்துறை துறைமுகத்தில் இருந்து நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு சென்ற குறித்த நபர்கள் தொடர்பில் சந்தேகம் கொண்ட இந்திய அதிகாரிகள், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளின்போது முன்னுக்குப் பின் முரணான தகவல்களை வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, குறித்த 13 பேரையும் மீண்டும் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு அனுப்ப அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இலங்கைக்கு திரும்பிய அவர்களை குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து, மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக காங்கேசன்துறை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் ஹல்துமுல்ல, மாம்பிட்டிய, கருங்கொடித்தீவு, மதவாச்சி, மொனராகலை, மாவடிச்சேனை, பொத்துவில், பலாங்கொடை, பதுளை மற்றும் திருகோணமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர்கள் 13 பேரிடமும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், அவர்களை இன்று (07) நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








