ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான ஐயன்கேணி பகுதியில் உள்ள விலங்கறுமனையில் அறுக்கப்படும் மாடுகளின் இறைச்சிக் கழிவுகளைப் பொது இடங்களில் வீசுவதை தடுப்பதற்கு சீ.சி.டீவி கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணித்து இறைச்சி கழிவுகளை வீசுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏறாவூர்பற்று பிரதேச சபை உறுப்பினர் செ. நிலாந்தன் தெரிவித்தார்.
அண்மையில் நடைபெற்ற ஏறாவூர்பற்று பிரதேச சபை அமர்வில், ஐயன்கேணியில் உள்ள பிரதேச சபைக்குச் சொந்தமான மாடுகளை அறுக்கும் விலங்கறுமனையை ஒப்பந்த அடிப்படையில் வழங்குவது தொடர்பான பிரேரணை தொடர்பில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் ,
கௌரவ உறுப்பினர் ஜௌபர் தெரிவித்த விடயங்களுக்கு அமைய, ஏறாவூர்பற்று பிரதேச சபைக்குச் சொந்தமான மாடுகளை அறுக்கும் விலங்கறுமனையில் இருந்து வெளியேற்றப்படும் மாட்டிறைச்சிக் கழிவுகள், பொது இடங்கள், வீதிகள் மற்றும் நீர்நிலைகளில் இரவு நேரங்களில் யாருக்கும் தெரியாமல் கொட்டப்படுவதாக பொது மக்கள் பல தடவைகள் புகார் அளித்துள்ளனர்.
இதனால் மிக மோசமான சுகாதாரச் சீர்கேடுகள் ஏற்படுவதுடன், வீதிகளில் செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றமும் வீசுகிறது.
மிக முக்கியமாக, எனது வட்டாரத்தில் உள்ள புன்னைக்குடா வீதிகள், வடிகான்கள், ஏறாவூர் நான்காம் குறிச்சி புகையிரத வீதி மற்றும் கோயில்களுக்கு அருகிலுள்ள பகுதிகளிலும் தொடர்ச்சியாக மாட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சிக் கழிவுகள் வீசப்படுகின்றன.
இதேபோன்று, ஏறாவூர் மிச்சிநகர் பிரதான வீதியில் அமைந்துள்ள ஆயிஷா பள்ளிவாசலுக்கு அருகிலும் மாட்டிறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும், மிச்சிநகர் பிரதான வடிகான்கள், மீராக்கேணி மையவாடி வீதி, புற்றுநோய் வைத்தியசாலை வீதி உள்ளிட்ட பல பகுதிகளிலும் இந்த விலங்கறுமனையில் இருந்து கொண்டு செல்லப்படும் இறைச்சிக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் எமது உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரதேச சபையினூடாக தொடர்ந்து குறித்த இடங்கள் துப்புரவு செய்யப்பட்டு வருகின்றபோதிலும், மீண்டும் மீண்டும் இரவு நேரங்களில் இறைச்சிக் கழிவுகள் அப்பகுதிகளில் கொட்டப்பட்டு வருகின்றன.
எனவே, பொது இடங்களில் இவ்வாறு இறைச்சிக் கழிவுகளை கொட்டுவோர் மீது சீ.சி.டீவி கேமராக்கள் பொருத்தப்பட்டு காண்காணிக்கப்பட்டு இவ்வாறு இறைச்சி கழிவுகளை வீசுவார்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இது குறித்து ஏறாவூர்பற்று பிரதேச சபை ஊடாக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.








