தாய்லாந்து அரசாங்கம் அறிவித்துள்ள திருத்தப்பட்ட விசா நடைமுறைகளின்படி, எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் இலங்கை கடவுச்சீட்டு வைத்திருப்பவர்கள் அந்நாட்டின் விசா விலக்குத் திட்டத்தின் கீழ் பயன்பெற முடியாது.
2026 செப்டம்பர் 15 அன்று திருத்தப்பட்ட விசா விலக்குத் திட்டம் நடைமுறைக்கு வரும்போது, 21 நாடுகளின் குடிமக்கள் தாய்லாந்திற்கான விசா இல்லா அனுமதியை இழப்பர் என தாய்லாந்து தெரிவித்துள்ளது. மெக்சிகோ, மொராக்கோ, கொலம்பியா, இலங்கை, ஜமைக்கா உள்ளிட்ட இந்த 21 நாடுகளைச் சேர்ந்தவர்கள் தற்போது 60 நாட்கள் வரை விசா இன்றி தங்கும் வசதியைப் பெற்றுள்ளனர்.
இருப்பினும், பாதிக்கப்பட்ட நாடுகளைச் சேர்ந்த பயணிகள் தாய்லாந்தின் இணையவழி இ-விசா தளம் மூலம் தொடர்ந்து விண்ணப்பிக்க முடியும் என்றும், சுற்றுலா விசா மூலம் ஒரு வருகையில் 60 நாட்கள் வரை தங்க அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தத் திருத்தத்தின் மூலம், விசா இன்றி தாய்லாந்திற்குள் நுழையத் தகுதியுள்ள நாடுகளின் எண்ணிக்கை 93-இலிருந்து 60 ஆகக் குறைகிறது. ஜூலை 2024-இல் அறிமுகப்படுத்தப்பட்ட தற்காலிக விலக்குத் திட்டத்திற்கு மாற்றாக இந்த சீர்திருத்தம் அமைகிறது; அப்போது 93 நாடுகளைச் சேர்ந்த சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கு 60 நாட்கள் விசா இன்றி நுழைய அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
இந்த புதிய விதிகள் 2026 செப்டம்பர் 15, செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வருகின்றன.
விசா விலக்கு இழக்கும் 21 நாடுகள்:
அல்பேனியா, அன்டோரா, கொலம்பியா, கியூபா, டொமினிகா, டொமினிகன் குடியரசு, எக்குவாடோர், குவாத்தமாலா, ஜமைக்கா, கொசோவோ, மெக்சிகோ, மொனாக்கோ, மொராக்கோ, பனாமா, பப்புவா நியூ கினியா, சான் மரினோ, இலங்கை, டோங்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ, உருகுவே, உஸ்பெகிஸ்தான்.








