இரண்டு பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்ப்பதற்காக இலஞ்சமாக இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தைப் பெற்றுக்கொண்ட காலிப் பகுதியைச் சேர்ந்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரான அதிபர், குறித்த பிள்ளைகளைச் சேர்ப்பதற்காக ஒரு பிள்ளைக்கு மூன்று லட்சம் ரூபாய் வீதம் இருவருக்கும் மொத்தம் ஆறு லட்சம் ரூபாய் கோரியிருந்தார். பின்னர் அத்தொகை மூன்று லட்சம் ரூபாயாகக் குறைக்கப்பட்டது.
அதில் ஒன்றரை லட்சம் ரூபாயை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டு, 2026ஆம் ஆண்டின் முதலாம் ஆண்டு வகுப்பிற்கு ஒரு பிள்ளையைச் சேர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டது. மற்றைய பிள்ளையை 8ஆம் வகுப்பில் சேர்ப்பதற்காக, எஞ்சிய ஒன்றரை லட்சம் ரூபாயில் 50,000 ரூபாயைப் பெற்றுக்கொண்டு அப்பிள்ளையையும் பாடசாலையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதன் பின்னர், இவ்விரு பிள்ளைகளையும் பாடசாலையில் சேர்ப்பதற்குத் தேவையான பணிகளைச் செய்து கொடுத்தமைக்காக மேலும் இரண்டரை இலட்சம் ரூபாய் கோரப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அப்பணத்தைக் கொடுக்காவிட்டால் இரு பிள்ளைகளையும் பாடசாலையை விட்டு நீக்கிவிடுவதாக அச்சுறுத்தி, அந்தத் தொகையை இலஞ்சமாகப் பெற முயன்றபோதே இக்கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.
சந்தேக நபர் காலி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.








