அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையேயான பதட்டம் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவும் நிலையில், செவ்வாய் (07) அன்று அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்தப் போவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. அத்துடன், அமெரிக்கப் போர்க்கப்பல் மீது அதிநவீன ஏவுகணை ஒன்றை ஏவியதாகவும் தெரிவித்துள்ளது.
ஆறு மாதங்களாக நீடிக்கும் இந்தப் போரில், சனிக்கிழமை அமெரிக்கப் படைகள் மூன்று ஈரானிய எண்ணெய்க் கப்பல்களைத் தாக்கியிருந்தன. இதற்குப் பதிலடியாக, தெஹ்ரான் காசெம் பசீர் ஏவுகணையைச் செலுத்தியதாக ஈரானிய அரசு ஊடகங்கள் தெரிவித்தன.
இதேவேளை, ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கான புதிய கட்டுப்பாட்டு மண்டலம் ஒன்றை அறிவிக்கவுள்ளதாகவும் ஈரான் உறுதியளித்துள்ளது. இப்பகுதிக்குள் நுழையும் கப்பல்கள் தமது தடைப் பட்டியலில் சேர்க்கப்படும் என ஈரானின் தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலாளர் மொஹ்சென் ரெசாய் எச்சரித்துள்ளார்.
மறுபுறம், தெற்கு லெபனானில் திங்களன்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.








