வவுனியா மாநகர முதல்வரைப் பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்கால தடைக்கட்டளையை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்குமாறு வவுனியா மேல் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.
வவுனியா மாநகர முதல்வரைப் பதவி நீக்கியதற்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட எழுத்தாணை விண்ணப்பம் வவுனியா மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த விண்ணப்பத்தில், மாநகர முதல்வர் மீதான இடைக்காலத் தடையை நீடிப்பதா அல்லது விலக்குவதா என்பது தொடர்பாகக் கடந்த தவணையில் நீண்ட விவாதம் இடம்பெற்றிருந்தது.
அந்த வகையில், இருதரப்பு விவாதங்களையும் எழுத்துமூல சமர்ப்பணமாக வழங்குமாறும், அதனைக் கடந்த 28ஆம் திகதி அன்றோ அல்லது அதற்கு முன்னதாகவோ தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கடந்த தவணை வழங்கப்பட்ட உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, மனுதாரர் சார்பில் எழுத்துமூல சமர்ப்பணங்கள் நீதிமன்றுக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.
எனினும், எதிர்மனுதாரர் தரப்பு சட்டத்தரணியால் (அரசு தரப்பு) எழுத்துமூல சமர்ப்பணங்களை வழங்க அவகாசம் கோரப்பட்டதையடுத்து, இரண்டு வார காலஅவகாசம் நீதிமன்றத்தால் இன்று வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், மாநகர முதல்வரைப் பதவிநீக்கி ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி மீதான இடைக்காலத் தடைக்கட்டளை இம்மாதம் 23ஆம் திகதி வரை நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் சார்பில் சட்டத்தரணி இ. தயாபரன் இன்று நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.








