முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவுக்கு விதிக்கப்பட்டுள்ள சிறைத்தண்டனையை குறைத்துத் தருவதாகக் கூறி, அவரது மனைவியிடம் இருந்து ரூ.750,000 கையூட்டல் பெற்றதாகக் கூறப்படும் நீதிமன்ற உதவியாளர் ஒருவர் செப்டம்பர் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு தலைமை நீதிவான் அசங்க போதரம இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். கையூட்டல் அல்லது ஊழல் தொடர்பான விசாரணை ஆணைக்குழுவான CIABOC முன்வைத்த தகவல்களின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஜீ.ஏ. சரித் குமார என அடையாளம் காணப்பட்டுள்ள சந்தேகநபர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஒருவரின் முறைப்பாட்டைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் குறித்த மேல் நீதிமன்ற நீதிபதியை தொலைபேசியில் தொடர்புகொண்டு, சரண குணவர்தன தொடர்பான வழக்கு குறித்து பேச முயன்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. வழக்குகள் தொடர்பாக பேசுவதற்கு தனக்கு என்ன அதிகாரம் உள்ளது என நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், சந்தேகநபருடன் உரையாட மறுத்துள்ளார்.
இதன்போது, இந்த விடயத்தை நீதிமன்றத்தில் பேச முடியாது என்றும், தனியாக சந்தித்து பேசலாம் என்றும் சந்தேகநபர் நீதிபதியிடம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் அத்தனகல்ல நீதிமன்ற அதிகாரி ஒருவரும், கொழும்பு மேல் நீதிமன்ற புத்தகக் கட்டுநர் ஒருவரும் தொடர்பில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, அபிவிருத்தி அதிர்ஷ்டலாபச் சபையின் தலைவராக பதவி வகித்த காலத்தில் வாகனங்களை முறைகேடாகப் பயன்படுத்தியதாக முன்வைக்கப்பட்ட 18 குற்றச்சாட்டுகளில் சரண குணவர்தன குற்றவாளியாகக் காணப்பட்டார். இதையடுத்து, கடந்த ஜூன் மாதம் கொழும்பு மேல் நீதிமன்றம் அவருக்கு 16 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.







