2015ஆம் ஆண்டுக்குப் பின்னர் சுகாதாரச் சேவையின் அங்கீகரிக்கப்பட்ட பணியாளர் வெற்றிடங்கள் முழுமையாகத் திருத்தப்படாததால், ஒட்டுமொத்த சுகாதாரச் சேவையும் சரிந்து விழும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளதாக அரசு வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது.
கடந்த ஒரு தசாப்தத்தில் நோயாளிகளின் எண்ணிக்கை, அறுவைச் சிகிச்சைகள், மருத்துவ நடைமுறைகள் மற்றும் பரிசோதனைகள் அதிகரித்துள்ள போதிலும், 2015ஆம் ஆண்டின் பணியாளர் வரம்புகளே தொடர்ந்தும் பயன்படுத்தப்படுவதாக சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், பொருளாதார நெருக்கடியின்போது ஆயிரக்கணக்கான வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ள நிலையில், சுகாதார அமைச்சுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இதுவரை சாதகமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என GMOA தெரிவித்துள்ளது.
எனவே, சுகாதாரத் துறையின் மறுசீரமைப்புகள் மற்றும் புதிய திட்டங்களை வெற்றிகரமாக முன்னெடுக்க, பணியாளர் வெற்றிடங்களை உடனடியாகத் திருத்துமாறு அதிகாரிகளிடம் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.







