உள்நாட்டுத் தொழில்முனைவோரின் உற்பத்திச் செலவைக் குறைத்து, தொழில் துறையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இறக்குமதிப் பொருட்களுக்கு விதிக்கப்படும் செஸ் வரியை படிப்படியாக நீக்கி, புதிய சுங்கவரி கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ இதனைத் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாக்கும் நோக்கில் இறக்குமதிப் பொருட்களுக்கு செஸ் வரி விதிக்கப்பட்டு வந்த போதிலும், நாட்டில் உள்ள பல உற்பத்தித் தொழில்கள் இறக்குமதி செய்யப்படும் மூலப்பொருட்களைச் சார்ந்தே இயங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
மூலப்பொருட்களின் இறக்குமதிச் செலவு அதிகரிப்பதால் உள்நாட்டு உற்பத்திகளின் செலவும் அதிகரிப்பதாகக் குறிப்பிட்ட அவர், இதனை கருத்திற்கொண்டு செஸ் வரியை கட்டம் கட்டமாக நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
இதன் முதற்கட்டமாக இடைநிலைப் பொருட்களுக்கு சலுகைக் காலத்துடன் செஸ் வரி படிப்படியாக நீக்கப்படவுள்ளது. இதன் மூலம் உள்நாட்டுத் தொழில்களுக்கு திடீர் பாதிப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதுடன், உற்பத்தியாளர்களை முறையான உற்பத்திச் செயல்முறைக்கு மாற்றுவதும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன், மூலப்பொருட்களின் இறக்குமதிச் செலவு குறைவதன் மூலம் உற்பத்திச் செலவைக் குறைத்து, உள்நாட்டு உற்பத்திகளின் போட்டித்திறனை அதிகரிக்கவும் அரசாங்கம் எதிர்பார்க்கிறது.
செஸ் வரி நீக்கப்பட்டதன் பின்னர் 0%, 10%, 20% மற்றும் 30% என நான்கு பிரிவுகளைக் கொண்ட புதிய சுங்கவரி கட்டமைப்பு அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இதன்படி, மூலப்பொருட்கள் மற்றும் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படும் பொருட்களுக்கு 0% சுங்கவரி விதிக்கப்படவுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் முடிவுற்ற பொருட்கள் மற்றும் தெரிவுசெய்யப்பட்ட சில பொருட்களுக்கு அதிகபட்சமாக 30% வரை சுங்கவரி விதிக்கப்படவுள்ளது.
இந்தப் புதிய வரிக்கட்டமைப்பின் ஊடாக உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் குறைந்த செலவில் கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், உள்நாட்டுத் தொழில்முனைவோரைப் பாதுகாத்து நாட்டின் உற்பத்தித் துறையை மேம்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக கலாநிதி அனில் ஜயந்த பெர்னாண்டோ மேலும் தெரிவித்தார்.







