மட்டக்களப்பு, கிரான் கூளாக்காடு சித்தி விநாயகர் ஆலய உற்சவத்தின் போது வெடிக்க வைத்த வெடி வெடிக்காததால், அதனைப் பார்க்கச் சென்ற 13 வயதுச் சிறுவன் அது வெடித்ததில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று (11) இரவு சுமார் 11 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கூளாக்காடு பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இடம்பெற்று வரும் நிலையில், நேற்று இரவு பூஜை வழிபாடுகளின்போது பெரிய வெடி ஒன்று கொளுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், அது உடனடியாக வெடிக்காததால், அதனை அங்கிருந்து அகற்றி வீசியுள்ளனர்.
அவ்வாறு வீசப்பட்ட வெடியை பார்ப்பதற்காக சிறுவன் அருகில் சென்றபோது, எதிர்பாராதவிதமாக அது வெடித்துள்ளது. இதில் சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த சிறுவன் உடனடியாக வாழைச்சேனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த சிறுவனின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் வாழைச்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







