ஹம்பாந்தோட்டை துறைமுகம் ஊடாக நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படும் சொகுசு வாகனங்களின் ‘ஸ்மார்ட் சாவிகளை’ (Smart Keys) திருடி, வெளிநபர்களுக்கு விற்பனை செய்து வந்த பிரதான கும்பலைச் சேர்ந்த துறைமுக ஊழியர் ஒருவரும், குருநாகலைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த இறக்குமதி வாகனங்களிலிருந்து தொடர்ச்சியாக ஸ்மார்ட் சாவிகள் காணாமல் போனதைத் தொடர்ந்து, துறைமுக பாதுகாப்புப் பிரிவினர் நடத்திய தீவிர விசாரணையில் சந்தேகநபரான ஊழியர் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
கடந்த சில மாதங்களில் மட்டும் சுமார் 45 ஸ்மார்ட் சாவிகள் திருடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் குறித்த ஊழியர் ரூ. 15 லட்சத்திற்கும் அதிகமான பணத்தைச் சம்பாதித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
திருடப்பட்ட சாவிகள் குருநாகல் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவருக்கு, வாகனத்தின் மாதிரிக்கு ஏற்ப குறைந்தபட்சம் ரூ. 6,000 முதல் விற்பனை செய்யப்பட்டுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான ஊழியர் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், குருநாகலில் வைத்து சாவிகளைப் பெற்றுக்கொண்ட தொழிலதிபரை பொலிஸார் கைது செய்ததுடன், அவரிடமிருந்த பல ஸ்மார்ட் சாவிகளையும் மீட்டெடுத்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தினூடாக வாகனங்கள் இறக்குமதி செய்யத் தொடங்கிய ஆரம்ப காலத்திலிருந்தே இந்தத் திருட்டுச் சம்பவம் நடைபெற்று வந்திருக்கலாம் எனப் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இரு சந்தேகநபர்களும் செப்டம்பர் 22 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஹம்பாந்தோட்டை துறைமுக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








