போர்க்காலத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளிடம் இருந்ததாகக் கூறப்படும் கைக்குண்டுகள் தற்போது பாதாள உலகக் குழுக்களின் கைகளில் உள்ளனவா என்பது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
மேல் மாகாணத்தில் அதிகரித்து வரும் பாதாள உலகக் குழுக்களின் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில், எதிர்காலத்தில் முப்படையினரின் அதிகாரிகளையும் இணைத்துக்கொள்வது தொடர்பிலும் பொலிஸார் பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டில் இதுவரை நாட்டில் ஆறு கைக்குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், அவற்றில் மூன்று கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளன.
இந்நிலையில், தெஹிவளையில் இடம்பெற்ற அண்மைய கைக்குண்டுத் தாக்குதலில் இரண்டு சிறுவர்கள் உயிரிழந்தனர்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு குற்றப் பின்னணி எதுவும் இல்லாத நிலையில், தவறான வீட்டை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.







