சட்டவிரோத நடவடிக்கைகளுக்காக SIM அட்டைகள் பயன்படுத்தப்படுவதை கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய மொபைல் இணைப்புகளைப் பதிவு செய்யும் நடைமுறையை மேலும் கடுமையாக்க இலங்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, புதிய SIM அட்டை பெறுபவர்களிடம் அடையாளப் பதிவின்போது ‘லைவ் புகைப்படம்’ பெறும் முறையை அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு) பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தற்போது சுமார் 30 மில்லியன் செயலில் உள்ள SIM இணைப்புகள் காணப்படுவதாகவும், சட்டவிரோத செயல்களில் SIM அட்டைகள் பயன்படுத்தப்படுவது குறித்து பொலிஸார் மற்றும் பாதுகாப்புத் தரப்பினர் கவலை தெரிவித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போதைய நடைமுறையில், ஒரு தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி ஒரு மொபைல் சேவை நிறுவனத்திடமிருந்து அதிகபட்சம் 5 SIM அட்டைகள் வரை பெற முடியும். நாட்டில் மூன்று பிரதான மொபைல் சேவை நிறுவனங்கள் இருப்பதால், ஒரே NIC மூலம் 15 SIM அட்டைகள் வரை பெறக்கூடிய நிலை காணப்படுகிறது.
புதிய நடைமுறை மூலம் SIM பதிவு செய்யும் நபரின் அடையாளத்தை வலுவாக உறுதிப்படுத்துவதுடன், SIM அட்டைகள் தவறாகப் பயன்படுத்தப்படுவதைத் தடுப்பதே நோக்கமாகும் என TRCSL தெரிவித்துள்ளது.
அதேசமயம் இதனிடையே, தற்போதைய தொலைபேசி எண்ணை மாற்றாமல் வேறு மொபைல் சேவை நிறுவனத்திற்கு மாறுவதற்கு அனுமதிக்கும் ‘Number Portability’ சேவையை அறிமுகப்படுத்துவதற்கான பணிகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
இச்சேவையை நடைமுறைப்படுத்துவதற்கான நிறுவன அமைப்பு மற்றும் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சேவை வழங்குநர்கள் தேவையான நெட்வொர்க் மேம்பாடுகளை மேற்கொண்ட பின்னர் சேவை அறிமுகப்படுத்தப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொலைத்தொடர்பு சேவை குறைவாக உள்ள பகுதிகளில் அடுத்த மூன்று ஆண்டுகளில் அரச ஆதரவுடன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாக பண்டார ஹேரத் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 5G தொழில்நுட்பம் 2025ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், நாட்டின் தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பை மேலும் நவீனப்படுத்தும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.







