மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டச் சிக்கல்களுக்கு முறையான தீர்வு காணப்பட்ட பின்னரே தேர்தலை நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
2017ஆம் ஆண்டில் நடைமுறையில் இருந்த தேர்தல் முறைமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், தற்போது அதே முறைமையின் கீழ் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டும் என கோருவது முரண்பாடான நிலைப்பாடு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹா பகுதியில் நேற்று (13.09.2026) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே பிரதி அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், 2017ஆம் ஆண்டு மாகாணசபைத் தேர்தலை தாமதப்படுத்தும் வகையிலான சட்ட மாற்றங்கள் அப்போதைய நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்திலேயே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறினார்.
அந்தக் காலப்பகுதியில் குறித்த தேர்தல் முறைமை தொடர்பில் எதிர்க்கட்சியினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்திருந்த போதிலும், தற்போது அதே முறைமையின் கீழ் தேர்தலை நடத்துமாறு கோருவது ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் அவர் தெரிவித்தார்.
குறைபாடுகளைக் கொண்ட பழைய தேர்தல் முறைமையின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடத்துவது எதிர்காலத்தில் நிர்வாக ரீதியான சிக்கல்களுக்கு வழிவகுக்கக்கூடும் எனவும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
எனவே, மாகாணசபைத் தேர்தல் முறைமையில் காணப்படும் சட்டப் பிரச்சினைகளுக்கு அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற வகையில் தீர்வு காணப்பட்ட பின்னர், முறையான தேர்தலை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மஹிந்த ஜயசிங்க மேலும் தெரிவித்தார்.








