பாடப்புத்தகங்களுக்கு விதிக்கப்படும் பெறுமதிசேர் வரியை (VAT) நீக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதற்கான திட்டங்கள் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நொச்சியாகம பகுதியில் நேற்று (13) ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு வரும் சூழலில் அரச நிர்வாகம் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்த ஜனாதிபதி, பொருளாதார ரீதியில் நாடு தற்போது ஸ்திரமடைந்துள்ளதாகவும் கூறினார்.
எனினும், பொருளாதார சுயாதீனத்தை இலங்கை இன்னும் முழுமையாக அடையவில்லை எனவும், அதனை எட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதார சேவைகளை பாதுகாப்பதுடன், மக்களுக்கு வழங்கப்படும் அரச சேவைகளின் வினைத்திறனை மேம்படுத்துவதற்கும் 2027ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தில் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.







