ஈரான் மற்றும் பாரசீக வளைகுடா நாடுகளுக்கு இடையே திங்கட்கிழமை நடைபெறவிருந்த முக்கிய சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய கிழக்கில் இராஜதந்திர முயற்சிகள் மேலும் சிக்கலடைந்துள்ளன.
அதேவேளை, பிராந்தியத்தின் முக்கிய எண்ணெய் போக்குவரத்து வழித்தடங்களைச் சுற்றி இடம்பெற்றுள்ள புதிய தாக்குதல்கள், உலகளாவிய எரிசக்தி விநியோகம் தொடர்பான அச்சத்தை அதிகரித்துள்ளன.
சவுதி அரேபியாவில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதல்களில் முக்கிய எண்ணெய்க் குழாய் வழித்தடம் சேதமடைந்ததைத் தொடர்ந்து, சுமார் 1,200 கிலோமீட்டர் நீளமான கிழக்கு–மேற்கு எண்ணெய் குழாய் பாதை வார இறுதியில் மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக உலக எண்ணெய் சந்தையில் விநியோக பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற கவலை அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, திங்கட்கிழமை சர்வதேச சந்தைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டபோது மசகு எண்ணெயின் விலை உயர்வை பதிவு செய்தது.
இந்நிலையில், ஈரான் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு இடையிலான சந்திப்பு ஒருமித்த கருத்தை எட்டும் நோக்கில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், அது ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக ஓமன் வெளியுறவு அமைச்சர் சையத் பத்ர் அல்புசைதி தெரிவித்துள்ளார்.
ஹார்முஸ் நீரிணை ஊடாக இடம்பெறும் கப்பல் மற்றும் எண்ணெய் போக்குவரத்தை நிர்வகிப்பது தொடர்பாக ஓமனுடன் கலந்துரையாடுவதற்காக ஈரானிய அதிகாரிகள் குறித்த சந்திப்பில் பங்கேற்கத் திட்டமிட்டிருந்தனர்.
எனினும், பிராந்தியத்தின் சில நாடுகளின் கோரிக்கையைத் தொடர்ந்து, தெஹ்ரான் மற்றும் மஸ்கட் இடையிலான ஒருமித்த முடிவின் அடிப்படையில் சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஈரானிய வெளியுறவு அமைச்சக அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி ‘ஃபார்ஸ்’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. சந்திப்பை நடத்துவதற்கான புதிய திகதியை தீர்மானிக்க ஓமனுடன் இணைந்து செயற்படவுள்ளதாகவும் ஈரான் தெரிவித்துள்ளது.
இதனிடையே, ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்றுகொண்டிருந்த கப்பல் ஒன்றின் மீது ஏவுகணை அல்லது அதற்கு ஒத்த பொருள் தாக்கியதில் தீ விபத்து ஏற்பட்டதாக பிரிட்டிஷ் கடல்சார் பாதுகாப்பு அமைப்பான UKMTO தெரிவித்துள்ளது. இதையடுத்து கப்பலில் இருந்த பணியாளர்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
மேலும், ஈரான் கடற்கரைக்கு அப்பால் தாக்குதலுக்குள்ளான ஈரானிய வர்த்தகக் கப்பல் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், நான்கு பணியாளர்கள் காயமடைந்துள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தொடர்ச்சியான தாக்குதல்கள் மற்றும் முக்கிய இராஜதந்திர சந்திப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை, மத்திய கிழக்கின் பாதுகாப்பு நிலைமை மட்டுமன்றி, உலகளாவிய எண்ணெய் விநியோகத்திலும் புதிய நெருக்கடி ஏற்படக்கூடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.








