மயிலத்தமடு–மாதவனை பகுதியில் கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தரக் கோரி முன்னெடுக்கப்பட்டு வரும் அறவழிப் போராட்டம் 1092 நாட்களை கடந்துள்ள போதிலும், தங்களது கோரிக்கைக்கு இதுவரை நிரந்தர தீர்வு வழங்கப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தங்களுக்கான மேய்ச்சல் தரையை உறுதிப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ள பண்ணையாளர்கள், இது தொடர்பில் தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் வகையில்நேற்று முன்தினம் (12) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர்.
ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல்கள் மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் மயிலத்தமடு–மாதவனை மேய்ச்சல் நிலம் தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றில் எதுவும் இதுவரை முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும் பண்ணையாளர்கள் குற்றஞ்சாட்டினர்.
மேலும், அப்பகுதியில் இடம்பெறுவதாகக் கூறப்படும் குடியேற்றம் மற்றும் காணி பயன்பாட்டு மாற்றங்களினால், தங்களது கால்நடைகளுக்கான மேய்ச்சல் நிலங்கள் பயிர்ச்செய்கை மற்றும் குடியேற்ற நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர்கள் தெரிவித்தனர்.
இதன் காரணமாக கால்நடைகளை மேய்ப்பதற்கு தேவையான நிலப்பரப்பு நாளுக்கு நாள் குறைந்து வருவதாகவும், இதனால் தங்களது நீண்டகால வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பண்ணையாளர்கள் சுட்டிக்காட்டினர்.
இந்நிலையில், தங்களது அறவழிப் போராட்டம் மூன்று வருடங்களை நிறைவு செய்வதை முன்னிட்டு எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக முன்வைத்து வரும் மேய்ச்சல் தரைக் கோரிக்கைக்கு இனியும் காலதாமதமின்றி நிரந்தரத் தீர்வை அரசாங்கம் வழங்க வேண்டும் என பண்ணையாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.











