வடக்கு – கிழக்கு மாகாணங்களில் நீண்டகாலமாக புனரமைக்கப்படாமல் உள்ள குளங்களை தூர்வாரி, அகலப்படுத்தி, ஆழப்படுத்தி முறையான நீர் முகாமைத்துவத்தை ஏற்படுத்துமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிடம் ஈ.பி.டி.பி. கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் உள்ள ஈ.பி.டி.பி. அலுவலகத்தில் நேற்று (13) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். இதில் கட்சியின் மாவட்ட இணைப்பாளர் சிவானந்தராஜாவும் கலந்து கொண்டார்.
வடக்கு – கிழக்கில் வறட்சி ஏற்பட்டாலும், மழை வெள்ளம் ஏற்பட்டாலும் விவசாயிகளும் மீனவர்களுமே அதிகம் பாதிக்கப்படுகின்றனர் எனத் தெரிவித்த அவர், குளங்கள் முறையாகப் புனரமைக்கப்படாததே இதற்கான பிரதான காரணங்களில் ஒன்றாகும் என்றார்.
குளங்களை முறையாகப் புனரமைத்தால் வறட்சி காலங்களில் நீரை சேமிக்கவும், மழைக்காலங்களில் வெள்ளநீரை கட்டுப்படுத்தவும் முடியும். இதன் மூலம் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்களையும் பாதுகாக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டினார்.
அத்தியாவசியமான அபிவிருத்திப் பணிகளுக்கு மாத்திரம் நிதியை பயன்படுத்தி, இரண்டு ஆண்டுகளுக்கு நிதியை சேமித்து வடக்கு – கிழக்கிலுள்ள குளங்களை புனரமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
குளங்களை புனரமைக்காமல் தொடர்ந்தும் வீதிகள் மற்றும் பாலங்களை மாத்திரம் புனரமைப்பது மக்களின் வரிப்பணத்தை வீணடிக்கும் செயல் எனவும் அவர் குறிப்பிட்டார். வெள்ளம் காரணமாக வீதிகள், பாலங்கள் மற்றும் பொதுமக்களின் சொத்துக்கள் சேதமடைந்த பின்னர் அவற்றை மீண்டும் மீண்டும் புனரமைப்பதற்குப் பதிலாக, குளங்கள் மற்றும் நீர்வழிகளை முன்கூட்டியே சீரமைப்பதே பயனுள்ளதாகும் என்றார்.
மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அபிவிருத்தி என்ற பெயரில் மக்கள் நடமாட்டம் குறைந்த பகுதிகளில் கட்டிடங்கள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஆலயங்களுக்கு நிதி ஒதுக்குதல் போன்ற பணிகளுக்கு முக்கியத்துவம் வழங்குவதாகவும், பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தொழிற்சாலைகளை அமைத்து இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் ஒதுக்கப்பட்டதாகக் கூறப்படும் 400 மில்லியன் ரூபாய் நிதியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் தொடர்பாகவும் அவர் கேள்வி எழுப்பினார்.
கோட்டைக்கல்லாறு பகுதியில் சுனாமியால் பாதிக்கப்பட்டு நீண்டகாலமாக பயன்பாடின்றி காணப்படும் பழைய கூட்டுறவு கட்டிடத்தை புனரமைப்பதற்காக சுமார் 50 இலட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டதாகவும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக பணி நிறைவு செய்யப்பட்டதாகவும் நிதி வழங்கப்பட்டதாகவும் தகவல்கள் கிடைத்துள்ள போதிலும், இரண்டு ஆண்டுகளாகியும் அந்தக் கட்டிடம் மக்கள் பயன்பாட்டிற்கு கையளிக்கப்படவில்லை எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.
கட்டிடத்திற்கு வர்ணம் பூசப்பட்டுள்ள போதிலும் கதவுகள், ஜன்னல்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாத நிலையில் அது பாழடைந்து காணப்படுவதாகவும், குறித்த காணி மற்றும் கட்டிடம் உண்மையில் யாருக்குச் சொந்தமானது என்பது தொடர்பில் விசேட குழுவொன்றை நியமித்து விசாரணை நடத்த வேண்டும் எனவும் அவர் கோரினார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு இந்தக் கைவிடப்பட்ட கட்டிடத்தை கையகப்படுத்தி மக்களின் தேவைக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் கேட்டுக்கொண்டார்.
இதனிடையே, பருவப்பெயர்ச்சி மழை ஆரம்பிக்கவுள்ள நிலையில் இலங்கையில் மூன்று பாரிய தாழமுக்கங்கள் ஏற்படக்கூடும் என வானிலை ஆய்வாளர் நாகமுத்து பிரதீபன் சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து வழிந்தோடும் வெள்ளநீர் பாலமீன்மடு மற்றும் திராய்மடு பகுதிகளைக் கடந்து முகத்துவாரம் ஊடாக கடலை சென்றடைகிறது. எனினும், கடலுக்கு செல்லும் பிரதான வடிகான்களில் சப்பை மற்றும் புற்கள் வளர்ந்து நீரோட்டம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
எனவே, மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் உடனடியாக கவனம் செலுத்தி பிரதான வடிகான்களைத் துப்புரவு செய்ய வேண்டும் எனவும், அவ்வாறு செய்யத் தவறினால் பாலமீன்மடு, திராய்மடு உள்ளிட்ட மீனவர்கள் செறிந்து வாழும் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்தார்.
அத்தகைய வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் அதற்கான முழுப் பொறுப்பையும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வரே ஏற்க வேண்டும் எனவும் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.








