ஆயுர்வேத கடை என்ற போர்வையில் கஞ்சா கலந்த லேகியத்தை விற்பனை செய்து வந்ததாகக் கூறப்படும் சந்தேகநபர் ஒருவர் இன்று (13) அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 9 கிலோகிராம் எடையுடைய கஞ்சா கலந்த லேகியமும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே குறித்த லேகியம் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் சந்தேகநபரை கைது செய்து, போதைப்பொருள் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட லேகியம் தொடர்பிலும் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.







