கொட்டாஞ்சேனை நகரில் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு பலத்த காயமடைந்த இளைஞர் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (14) இரவு இடம்பெற்ற இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில், கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்தவர் வெல்லம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞர் எனத் தெரியவந்துள்ளது.
தனிப்பட்ட தகராறு முற்றியதன் காரணமாக இரண்டு நபர்களால் குறித்த இளைஞர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காக கொட்டாஞ்சேனை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இதனிடையே, யக்கலமுல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொரகெட்டிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக யக்கலமுல்ல பொலிஸ் நிலையத்திற்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கொலை செய்யப்பட்டவர் யக்கலமுல்ல பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய நபர் எனத் தெரியவந்துள்ளது.
பழைய பகை காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, கூர்மையான ஆயுதத்தால் தாக்கி குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், யக்கலமுல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.








