கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் 6ஆம் இலக்க பயணப் பொதிப் பாதை அருகே கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட சுமார் 32 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இரண்டு பயணப் பொதிகளுக்குள் காற்று புகாதவாறு 60 பாக்கெட்டுகளில் பொதி செய்யப்பட்டிருந்த இந்த போதைப்பொருள், நேற்று (14) தாய்லாந்தின் பேங்கொக்கிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான UL-405 விமானத்தில் பயணித்த ஒருவரால் கொண்டுவரப்பட்டிருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமான நிலையத்திற்குள் கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் குறித்த பயணி போதைப்பொருள் அடங்கிய பயணப் பொதிகளை கைவிட்டு தப்பிச் சென்றிருக்கலாம் என பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகையை விமான நிலையத்துக்குக் கொண்டு வந்த பயணி யார் என்பதைக் கண்டறிவதற்காக தற்போது விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதனிடையே, கைப்பற்றப்பட்ட குஷ் போதைப்பொருள் தொகை இன்று (15) நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







