ஒலிம்பிக் செம்பியன் மற்றும் உலக செம்பியன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களை விஞ்சி, தற்போதைய உலக தடகள அரங்கின் ஈட்டி எறிதல் போட்டியில் தனது ஆதிக்கத்தைத் தொடர்ந்து நிரூபித்து வரும் இலங்கையின் ஈட்டி எறிதல் செம்பியன் ருமேஷ் தரங்க இன்று (15) அதிகாலை நாட்டை வந்தடைந்தார்.
தனது வெற்றியையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த ருமேஷ், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டதுடன், இலங்கைக்காகத் தான் வெல்வதற்கு இன்னும் மூன்று பதக்கங்கள் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும் குறிப்பிட்டார். தனது இதுவரையான பயணத்தைத் தொகுத்து ஒரு புத்தகம் உருவாக்கியுள்ளதாகவும், இந்த மாதம் 17ஆம் திகதி அதன் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிய விளையாட்டுப் போட்டிகள், உலக செம்பியன்ஷிப் மற்றும் ஒலிம்பிக் ஆகியவை தனது அடுத்தடுத்த இலக்குகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஒலிம்பிக் மற்றும் உலக தடகள செம்பியன்ஷிப்பிற்கு அடுத்தபடியாக, உலகின் முன்னணி தடகள நட்சத்திரங்கள் பங்கேற்கும் முக்கிய தொடராகக் கருதப்படும் அல்டிமேட் செம்பியன்ஷிப் தொடரின் ஆண்கள் ஈட்டி எறிதல் பிரிவில் ருமேஷ் தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றினார். தற்போதைய ஒலிம்பிக் செம்பியன் பாகிஸ்தானின் அர்ஷத் நதீம், உலக செம்பியன் டிரினிடாட் மற்றும் டொபேகோவின் கேஷோர்ன் வோல்கொட், இருமுறை உலக செம்பியன் கிரெனடாவின் எண்டர்சன் பீட்டர்ஸ் மற்றும் ஐரோப்பிய செம்பியன் ஜேர்மனியின் ஜூலியன் வெபர் உள்ளிட்ட 8 வீரர்கள் இப்போட்டியில் தகுதி பெற்றிருந்தனர்.
போட்டியின் முதல் முயற்சியில் 75.89 மீற்றர் தூரம் எறிந்த ருமேஷ், ஐந்தாவது இடத்தில் இருந்தார். இரண்டாவது சுற்றில் 85.69 மீற்றர் எறிந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய அவர், மூன்றாவது சுற்றில் 87.11 மீற்றர் தூரம் எறிந்து முதலிடத்தைப் பிடித்தார். இறுதி முயற்சியில் 91.09 மீற்றர் என்ற பிரம்மாண்ட எறிதலைப் பதிவு செய்து, தன்னை மிஞ்ச எவரும் இல்லை என்பதை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதன்மூலம், ஏற்கெனவே பொதுநலவாய செம்பியன் மற்றும் டைமண்ட் லீக் செம்பியனான ருமேஷ் தரங்க, ‘வேர்ல்ட் அல்டிமேட் செம்பியன்’ பட்டத்தையும் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இந்த வெற்றிக்காக அவருக்கு 1,50,000 அமெரிக்க டொலர்கள் (சுமார் 5 கோடி இலங்கை ரூபாய்) பரிசுத் தொகையாகக் கிடைத்துள்ளது.







