மட்டக்களப்பில் 2008ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்து பேரின் படுகொலைச் சம்பவங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட மூவரையும் எதிர்வரும் செப்டம்பர் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் இன்று (15) உத்தரவிட்டுள்ளது.
பிள்ளையான் மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவின் தகவலாளிகள் எனக் கூறப்படும் மொஹமட் சிபான், மொஹமட் சகீத் ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
2008ஆம் ஆண்டு கல்லடி, காத்தான்குடி மற்றும் வவுணதீவு கரையாக்கன்தீவு பகுதிகளில் இடம்பெற்ற கொலை மற்றும் கடத்தல் சம்பவங்கள் தொடர்பிலேயே CID விசாரணை முன்னெடுத்து வருகிறது.
இதேவேளை, வழக்கின் மற்றொரு சந்தேகநபரான ‘பொலிஸ் பாயிஸ்’ என அழைக்கப்படும் மொஹமட் பாய்ஸைக் கைது செய்வதற்காக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவரை சர்வதேச பொலிஸார் ஊடாக கைது செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக CID நீதிமன்றில் தெரிவித்துள்ளது.








