பட்டிருப்பு தேசிய பாடசாலை – களுவாஞ்சிகுடியை இரசாயனவியல் ஆசிரியர் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்கள், சீனாவில் நடைபெறவுள்ள சர்வதேச விஞ்ஞான நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இலங்கை அணித்தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
சீனாவின் குவாங்சு மாநிலத்தில் நடைபெறவுள்ள 10ஆவது Road Belt Teenager Maker Camp மற்றும் விஞ்ஞான ஆராய்ச்சி தொடர்பான ஆசிரியர்களுக்கான மாநாட்டில் கலந்துகொள்ளும் இலங்கை அணியின் தலைவராக, கல்வி அமைச்சும் தேசிய விஞ்ஞான நிறுவனமும் இணைந்து இவரைத் தெரிவு செய்துள்ளன.
இவருடன் நீர்கொழும்பு ஹரிஷ்சந்திர தேசிய பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியை திருமதி. நில்கா முனசிங்க மற்றும் ஐந்து மாணவர்களும் இலங்கை குழுவில் பங்கேற்கின்றனர்.
மாணவர்களை விஞ்ஞான ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுத்தி, பல்வேறு விஞ்ஞான ஆராய்ச்சிப் போட்டிகளில் பங்குபற்றச் செய்து, கடந்த ஒன்பது ஆண்டுகளாகத் தேசிய மற்றும் சர்வதேச மட்டங்களில் தொடர்ச்சியான வெற்றிகளைப் பெற்றுக்கொள்ளத் திரு. செல்வராஜா தேவகுமார் அவர்கள் வழிகாட்டி வருகின்றார்.
விஞ்ஞான மன்றம் மற்றும் கல்வி அமைச்சினால் வழங்கப்படும் “விஞ்ஞான விருத்திக்கான இலங்கையின் சிறந்த ஆசிரியர்” என்ற தேசிய விருது, 2023 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்காக இவருக்கு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கடந்த வருடம் தாய்லாந்தில் நடைபெற்ற சர்வதேச இளம் விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி போட்டி மற்றும் மாநாட்டிலும் இலங்கை அணியின் தலைவராக இவர் பங்கேற்றிருந்தார்.
விஞ்ஞானக் கல்வி மற்றும் மாணவர்களின் ஆராய்ச்சித் திறன் வளர்ச்சிக்காகத் தொடர்ச்சியாகப் பணியாற்றிவரும் ஆசிரியர் செல்வராஜா தேவகுமார் அவர்களின் இந்தச் சர்வதேசப் பயணம், கிழக்கு மாகாணத்திற்கும் பட்டிருப்பு தேசிய பாடசாலைக்கும் பெருமை சேர்க்கும் நிகழ்வாக அமைந்துள்ளது.








