பிரேசிலில் பாடசாலை ஒன்றின் அருகே தேனீக் கூட்டத்தால் தாக்கப்பட்ட சிறுமியை, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் தனது உயிரையும் பொருட்படுத்தாமல் மீட்டு பாடசாலைக்குள் அழைத்துச் சென்ற சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மினாஸ் ஜெராய்ஸ் மாநிலத்தின் இபிரிட்டே பகுதியில் உள்ள ஓரோ நெக்ரோ பகுதியில் திங்கட்கிழமை (14) இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக அந்நாட்டு தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.
சிறுமி சாலையில் அழுதுகொண்டு தேனீக்களால் சூழப்பட்டிருந்த நிலையில், அவ்வழியாக சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் வினிசியஸ் மார்ட்டின்ஸ், சிறுமியை மீட்டு பாடசாலைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
சிறுமியின் உடலில் தேனீக்கள் அதிகளவில் கொட்டியிருந்த நிலையில், மோட்டார் சைக்கிளில் இருந்த டியோடரன்ட் ஸ்பிரேயை பயன்படுத்தி தேனீக்களை விரட்ட முயன்ற அவர், சிறுமியை பாடசாலைக்குள் அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் பாடசாலையில் இருந்தவர்கள் சிறுமி மீது தண்ணீரை ஊற்றியதைத் தொடர்ந்து தேனீக்கள் கலைந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் சிறுமியின் கைகளில் பல தேனீக்கடிகள் ஏற்பட்டிருந்ததுடன், சில மாணவர்களும் தேனீக்கடிகளால் பாதிக்கப்பட்டு அவசர மருத்துவ சேவையினரால் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டனர்.
சிறுமியை மீட்கும் போது தமக்கு சுமார் 40 தேனீக்கடிகள் ஏற்பட்டதாக வினிசியஸ் தெரிவித்துள்ளார். சிறுமியின் தற்போதைய உடல்நிலை தொடர்பான தகவல் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை நுழைவாயிலுக்கு அருகிலிருந்த மரத்திலிருந்து தேனீக்கூடு விழுந்ததையடுத்து இந்தத் தாக்குதல் இடம்பெற்றதாக தீயணைப்புப் படையினர் தெரிவித்துள்ளனர். பின்னர், அதே இரவு தேனீக்கூடு அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.







