நாராஹென்பிட மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்கள (RMV) வளாகத்தில் பல ஆண்டுகளாக வேரூன்றியிருந்த தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மாஃபியாவை ஒழிப்பதற்காக, புதிய மோட்டார் வாகன ஆணையாளர் ஜெனரல் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இதூனில் பெர்னாண்டோ அவர்களின் உத்தரவின் பேரில் பொலிஸார் களமிறக்கப்பட்டுள்ளனர்.
பொதுமக்களைப் பீதிக்குள்ளாக்கி பணம் மற்றும் ஆவணங்களைச் சுருட்டி வந்த சட்டவிரோதச் செயல்களைத் தடுப்பதற்காக இந்த அதிரடித் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இதன் கீழ், பொதுமக்களை ஏமாற்றிப் பணம் பறித்த தரகர்கள் மற்றும் இடைத்தரகர்கள் வளாகத்திலிருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்டதுடன், அலுவலகத்திற்கு முன்பாகப் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத வாகன நிறுத்துமிடமும் பொலிஸாரால் முற்றிலுமாக அகற்றப்பட்டது. மேலும், வளாகத்திற்குள் அனுமதியற்ற முறையில் நடமாடிய வியாபாரக் கூடங்களும் அகற்றப்பட்டு, பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக வார நாட்களில் காலை 7.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை RMV-இல் பொலிஸார் நிரந்தரக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்கள் எவ்வித இடையூறுமின்றி மிகவும் இலகுவாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.








