முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரன்னாகொட மற்றும் யோஷித ராஜபக்ஷ ஆகியோருக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தாக்கல் செய்துள்ள வழக்கை, முன் விசாரணை மாநாட்டிற்காக ஒக்டோபர் 13 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு இன்று (17) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர பிரேமரத்ன முன்னிலையில் அழைக்கப்பட்ட போது, பிணையில் உள்ள பிரதிவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
இதன்போது, வசந்த கரன்னாகொட சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷவீந்திர பெர்னாண்டோ, வழக்கின் சாட்சியங்களாக சமர்ப்பிக்கப்பட்டுள்ள சில வாக்குமூலங்களின் முழுமையான பிரதிகள் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்கப்படவில்லை என சுட்டிக்காட்டினார்.
யோஷித ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள சில ஆவணங்கள் தெளிவற்றதாக இருப்பதால், அவற்றின் தெளிவான பிரதிகளை வழங்குமாறு கோரினார்.
இதற்கு பதிலளித்த இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ருவினி விக்ரமசிங்க, பிரதிவாதிகள் கோரும் சில ஆவணங்கள் மேல் நீதிமன்றத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதால் அவற்றை வழங்க முடியாது எனவும், ஆணைக்குழுவிடம் உள்ள ஆவணங்களை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
விடயங்களை பரிசீலித்த நீதிபதி, நீதிமன்றத்தின் பொறுப்பில் உள்ள பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை உரிய கட்டணத்திற்கு உட்பட்டு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
மேலும், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் உள்ள ஏனைய தொடர்புடைய ஆவணங்கள் இருப்பின் அவற்றையும் பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
2006 ஆம் ஆண்டு உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாத யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் நிறைவேற்று அதிகாரிப் பயிற்சிப் கேடட்டாக இணைத்துக் கொண்டமை மற்றும் நடைமுறைகளுக்கு புறம்பாக பிரித்தானியாவின் அரச கடற்படை பயிற்சி கல்லூரியின் பயிற்சி நெறிமுறைக்கு அரசாங்கப் பணத்தை செலவிட்டு பங்கேற்கச் செய்தமையின் மூலம் ஊழல் புரிந்துள்ளதாக குற்றம்சாட்டி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் இந்த குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.








