கிழக்கு மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் கடற்கரைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத நிர்மாணங்களைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி தலைமையில் நேற்று (16) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இரண்டாவது தடவையாகக் கூடியது.
கிழக்கு மாகாணத்தில் சட்டவிரோத காணி ஆக்கிரமிப்புகளைத் தடுப்பது, கடற்கரைப் பகுதிகளைப் பாதுகாப்பது மற்றும் காணிப் பிரச்சினைகளுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட அரச நிறுவனங்களை ஒருங்கிணைப்பதே இக்குழுவின் பிரதான நோக்கமாகும்.
குழுவின் இதுவரையான களப் பரிசோதனைகளின் முன்னேற்றம் மற்றும் தற்போதைய நிலைமை தொடர்பில் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
கிழக்கு மாகாண கடற்கரைப் பகுதிகளில் இடம்பெறும் சட்டவிரோத நிர்மாணங்கள், அரச காணி ஆக்கிரமிப்புகள் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குச் சொந்தமான காணிகளை சட்டவிரோதமாகப் பயன்படுத்துதல் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல்கள் கோரப்பட்டன.
இது தொடர்பான முழுமையான அறிக்கையை இரண்டு மாதங்களுக்குள் சமர்ப்பிக்குமாறு குழு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியது.
அத்துடன், அருகம்பே கடற்கரையில் காணப்படும் சட்டவிரோத நிர்மாணங்கள் தொடர்பில் இடைக்கால அறிக்கையொன்றைப் பெறுவதற்கும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அறிக்கைகளைத் தயாரிக்கும் போது மாவட்ட செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களிடமிருந்தும் தேவையான தகவல்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
கிழக்கு மாகாண காணிப் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சேனக பல்லியகுருகே உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம், வனப் பாதுகாப்புத் திணைக்களம் மற்றும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளும் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.








