திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை (17) அதிகாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள் ஒன்று சீமெந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில், மோட்டார் சைக்கிளில் பயணித்த தோப்பூர் – செல்வநகர் பகுதியைச் சேர்ந்த அன்சார் அல்ஹாம் (33) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

அவருடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த சித்திக் சாபி (26) என்பவர் படுகாயமடைந்து ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
உயிரிழந்தவரின் ஜனாஸா ஈச்சிலம்பற்று பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த நிலையில், திடீர் மரண விசாரணை அதிகாரி ஏ.ஜே.எம். நூருல்லா ஜனாஸாவை பார்வையிட்ட பின்னர், பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈச்சிலம்பற்று பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர் விரைவில் குணமடைய பிரார்த்திப்போம்.








