ரோட்டரி சர்வதேச அமைப்பின் மாவட்டம் 3220 – இலங்கை மற்றும் மாலைதீவு கீழ் இயங்கும் பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் இரண்டாவது பதவியேற்பு விழா சனிக்கிழமை (19) கல்லடியில் உள்ள கிறீன் காடின் உல்லாச விடுதியில் சிறப்பாக நடைபெற்றது.
ரோட்டரி கழகத்தின் தலைவர் ரோட்டரி எஸ். லோஜிதராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக ரோட்டரி மாவட்ட ஆளுநர் ரோட்டரி குமார் சுந்தரராஜா கலந்து கொண்டார். மாவட்டச் செயலாளர் ரோட்டரி இயன் இடமல்கொட, உதவி ஆளுநர் ரோட்டரி எஸ். ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்ட ஆளுநரின் பிரதிநிதி ரோட்டரி ஜெகவண்ணன் ஆகியோரும் சிறப்பு அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இதன்போது, பட்டிருப்பு ரோட்டரி கழகத்தின் 2026–2027 ஆண்டுக்கான புதிய தலைவராக ரோட்டரி நிரோஷாந்த் சத்தியநாதன் பதவியேற்றார். ரோட்டரி எஸ். லோஜிதராஜா மற்றும் எஸ். தர்சனன் ஆகியோர் முறையே பதவிகளுக்கு நியமிக்கப்பட்டனர்.
இரண்டாவது பதவியேற்பு விழாவை முன்னிட்டு, கல்வி மற்றும் மாணவர் நலனை முன்னிறுத்தி மூன்று முக்கிய சமூகநலத் திட்டங்கள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
முதலாவது திட்டமாக, பாடசாலைக்கு சென்று வருவதில் போக்குவரத்து சிரமங்களை எதிர்கொள்ளும் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த தெரிவுசெய்யப்பட்ட ஒன்பது மாணவர்களுக்கு சைக்கிள்கள் வழங்கப்பட்டன.
இரண்டாவது திட்டமாக, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாதுகாப்பானதும் சுத்தமானதுமான குடிநீரை வழங்கும் நோக்கில், தெரிவுசெய்யப்பட்ட பாடசாலையொன்றுக்கு குடிநீர் சுத்திகரிப்பு உபகரணம் வழங்கி வைக்கப்பட்டது. இதன் மூலம் பாடசாலை சமூகத்தின் குடிநீர் தேவையை சுகாதாரமான முறையில் பூர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மூன்றாவது திட்டமாக, தாந்தாமலைப் பகுதியில் கணிதப் பாடத்தில் மேலதிக உதவி தேவைப்படும் மாணவர்களுக்காக தெரிவுசெய்யப்பட்ட பாடசாலையொன்றில் தனியார் ஆசிரியர் மூலம் மாதாந்த மேலதிக கணித வகுப்புகளை நடத்துவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இதற்காக மாதாந்தம் 20,000 ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளது.
‘Service Above Self’ – ‘தன்னலமற்ற சேவை’ என்ற ரோட்டரியின் அடிப்படைக் கொள்கைக்கு அமைவாக, பட்டிருப்பு ரோட்டரி கழகம் கல்வி, சுகாதாரம் மற்றும் சமூக நலன் சார்ந்த பல்வேறு திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது.

அத்துடன், ‘Create Lasting Impact’ – ‘நிலையான தாக்கத்தை உருவாக்குதல்’ என்ற ரோட்டரியின் 2026–2027 ஆண்டுக்கான நோக்கத்துடன் இணைந்து, மாணவர்களின் கல்வி மற்றும் அடிப்படை நலனில் நீண்டகால பயனை ஏற்படுத்தும் வகையில் இத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
எதிர்காலத்திலும் சமூகத்தின் தேவைகளை அடையாளம் கண்டு, மக்களின் வாழ்க்கையில் பயனுள்ள மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய பல்வேறு சேவைத் திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக பட்டிருப்பு ரோட்டரி கழகம் தெரிவித்துள்ளது.
இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள பல்வேறு ரோட்டரி கழகங்களின் உறுப்பினர்கள், குடும்ப உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், மாணவர்கள், பயனாளிகள், நண்பர்கள் மற்றும் நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டனர்














