மட்டக்களப்பு, ஆரையம்பதி பகுதியில் பெண் ஒருவர் மீது பெற்றோல் ஊற்றி தீ மூட்டிய சம்பவத்தில் படுகாயமடைந்த 55 வயதுடைய பெண், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
ஆரையம்பதி பழைய கல்முனை வீதியைச் சேர்ந்த சின்னத்தம்பி கமலேஸ்வரி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை (03) மாலை சுமார் 4 மணியளவில், குறித்த பெண் தனது வீட்டின் முன்புறத்தில் கதிரையில் தனியாக அமர்ந்திருந்துள்ளார்.
இதன்போது, வீட்டின் பின்புறமாக வந்த அவரது உறவினரான ஆண் ஒருவர், பெண்ணின் மீது பெற்றோலை ஊற்றி தீ வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பற்றிய நிலையில் பெண் கூச்சலிட்டதைத் தொடர்ந்து, அருகிலிருந்தவர்கள் விரைந்து சென்று தீயை அணைத்து அவரைக் காப்பாற்றியுள்ளனர். பின்னர் பலத்த தீக்காயங்களுடன் அவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பிச் சென்று தலைமறைவாகியிருந்த சந்தேகநபர், மறுநாள் புதன்கிழமை (04) பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் உயிரிழந்த பெண்ணின் கணவரின் சகோதரியின் கணவர் எனத் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து, எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த குறித்த பெண், நேற்று வியாழக்கிழமை (05) காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.









