மட்டக்களப்பு மாவட்ட ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில், மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான விசேட கள விஜயம் நேற்று (05) இடம்பெற்றது.
அரசாங்கத்தினால் மக்களின் நலன்கருதி முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நேரில் பார்வையிட்டு அவற்றின் முன்னேற்றங்களை அறிந்துகொள்ளும் நோக்கில் இந்த விஜயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மட்டக்களப்பு மாவட்ட தகவல் அதிகாரி வி. ஜீவானந்தன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக் களவிஜயத்தின் போது, மண்முனை மேற்கு – வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஆயித்தியமலை வடக்குப் பகுதியில் பிரஜாசக்தி வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்திப் பணிகள் தொடர்பில் ஊடகவியலாளர்கள் நேரில் பார்வையிட்டனர்.
இதன் முதற்கட்டமாக வவுணதீவு பகுதியில் அமைந்துள்ள நெல் உலர்த்தும் நிலையத்திற்கு ஊடகவியலாளர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர். இதன்போது அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் கட்டுமானப் பணிகள் தொடர்பிலும் பார்வையிடப்பட்டது.
அதனைத் தொடர்ந்து ஈச்சந்தீவு பகுதியில் அரசாங்கம் மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்டு வரும் சூரிய மின்சக்தி உற்பத்தித் திட்டம் பார்வையிடப்பட்டது.
இதனையடுத்து பழுகாமம் பகுதியில் அமைந்துள்ள புளுக்குணாவ குளம் மற்றும் அங்கு முன்னெடுக்கப்பட்டு வரும் மீன்வளர்ப்புத் திட்டம் தொடர்பிலும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. குறித்த திட்டத்திற்காக அரசாங்கத்தினால் 20 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இறுதியாக டிட்வா புயலினால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பைத் தொடர்ந்து பழுகாமம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிகப் பாலத்தையும் ஊடகவியலாளர்கள் பார்வையிட்டனர்.
இதனுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களை பார்வையிடும் கள விஜயம் நிறைவடைந்தது.






























