மட்டக்களப்பு, வாகனேரி பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 60 வயதுடைய விவசாயி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் யானை–மனித மோதலைத் தடுக்க உடனடியாக யானை வேலி அமைக்குமாறு கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வாகனேரி பிரதேசத்தைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான ஞானமுத்து மனோகரன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று திங்கட்கிழமை (21) காலை வீட்டிலிருந்து வயல் வேலைக்காகச் சென்றிருந்தபோது, காட்டு யானையின் தாக்குதலுக்கு அவர் இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தாக்குதலில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மற்றும் மரண விசாரணை அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டதுடன், உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், வாகனேரி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் மற்றும் தாக்குதல்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
யானைத் தாக்குதல்கள் தொடர்பில் வனவிலங்கு அதிகாரிகளிடம் பலமுறை முறைப்பாடுகள் முன்வைத்த போதிலும், உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை எனவும் மக்கள் குற்றம் சாட்டினர்.
இதனையடுத்து, சம்பவம் இடம்பெற்ற இடத்தில் ஒன்றுகூடிய பிரதேச மக்கள், ‘இனியும் உயிர்ப் பலி ஏற்படுவதற்கு முன்னர் யானை–மனித மோதலைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ எனக் கோரிக்கை விடுத்தனர்.
‘எங்கள் உயிர்களை பாதுகாக்க யானை வேலி அமைக்க வேண்டும்’, ‘இனியும் உயிர்களை இழக்க நாங்கள் தயாரில்லை’ உள்ளிட்ட கோஷங்களை எழுப்பியவாறு சுமார் ஒரு மணித்தியாலம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், வாகனேரி பிரதேசத்திற்கு உடனடியாக யானை வேலி அமைத்து நிரந்தரத் தீர்வை பெற்றுத்தருமாறு அரசாங்கத்திடமும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமும் கோரிக்கை விடுத்தனர்.












