வடமத்திய மாகாணத்தின் முன்னாள் ஆளுநர் மஹீபால ஹேரத், முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கணக்காய்வில் கண்டறியப்பட்ட 11,320 லீற்றர் எரிபொருளுக்கான 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை மீளச் செலுத்தியுள்ளார்.
கணக்காய்வாளர் நாயகம் திணைக்களம் மேற்கொண்ட கணக்காய்வில், குறித்த எரிபொருள் பயன்பாடு அரசாங்கத்தின் சுற்றறிக்கை விதிமுறைகளை மீறியுள்ளமை கண்டறியப்பட்டது.
இதனையடுத்து, பயன்படுத்தப்பட்ட எரிபொருளுக்கான தொகையை மீள அறவிடுமாறு வடமத்திய மாகாண சபைக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி, 11 இலட்சத்து 70 ஆயிரம் ரூபாவை முன்னாள் ஆளுநர் பணமாகச் செலுத்தியுள்ளதாக வடமத்திய மாகாண சபையின் பிரதிச் செயலாளர் அருண ரவி தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த முறைகேட்டுக்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு கணக்காய்வாளர் நாயகம் திணைக்களத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய அதிகாரிகள் ஏற்கனவே ஓய்வுபெற்றுள்ளதால், அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








