தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்காக கிழக்கு மாகாண மக்கள் உற்சாகத்துடன் தயாராகி வருகின்றனர்.
அந்த வகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தீபாவளிற்கான கொள்வனவுகளில் பொதுமக்கள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு வருகை தரும் மக்கள், தீபாவளிப் பண்டிகைக்குத் தேவையான புத்தாடைகள், மங்களப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களைக் கொள்வனவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில், மாவட்டத்தின் பின்தங்கிய பிரதேசங்களில் இருந்து நகருக்கு வருகை தரும் பொதுமக்களின் போக்குவரத்து வசதியைக் கருத்திற்கொண்டு, மாவட்ட அரசாங்க அதிபரின் பணிப்புரைக்கு அமைய விசேட போக்குவரத்து ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
மாவட்டத்தில் கடந்த இரவு முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக மழை பெய்து வந்த நிலையில், இன்று நண்பகல் வேளையில் வானிலை ஓரளவு சீரடைந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் உற்சாகத்துடன் நகருக்கு வருகை தந்து தீபாவளிற்கான பொருட்களைக் கொள்வனவு செய்து செல்வதை அவதானிக்க முடிந்தது.
சீரற்ற காலநிலைக்கு மத்தியிலும் தீபாவளிப் பண்டிகையை வரவேற்கும் வகையில் மட்டக்களப்பு நகரம் தற்போது களைகட்டியுள்ளது.















