மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினால் வருமான வரி அறவிடும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையே ஏற்பட்ட முறுகல் நிலை, காத்தான்குடி பொலிஸாரின் தலையீட்டையடுத்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.
மட்டக்களப்பு மாநகரசபைக்கும் காத்தான்குடி நகரசபைக்கும் இடையிலான எல்லைப் பகுதியாக காணப்படும் மஞ்சந்தொடுவாய் 16ஆம் வட்டாரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில், மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் வருமான வரி அறவீட்டுக்கான நடமாடும் சேவையை முன்னெடுப்பதற்காக சென்றிருந்தனர்.
அதேவேளை, குறித்த பள்ளிவாசல் வளாகத்தில் காத்தான்குடி நகரசபை ஊழியர்களும் ஏற்கனவே வருமான வரி அறவீட்டுக்கான நடமாடும் சேவையை முன்னெடுத்துக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் காத்தான்குடி நகரசபையினர் வருமான வரி அறவிடுவதற்கு மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன்போது குறித்த வட்டாரத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மாநகரசபை உறுப்பினர்களும் அங்கு வருகைதந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கடந்த நான்கு வருடங்களாக காத்தான்குடி நகரசபையினால் இவ்வாறான வரி அறவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இதற்கு முன்னர் உரிய எதிர்ப்பு அல்லது நிர்வாக ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படாத காரணத்தினால் இந்த நிலை தொடர்வதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதன்போது, தமது நகரசபை தவிசாளர் மற்றும் உயர் அதிகாரிகளின் பணிப்புரையின் அடிப்படையிலேயே தாங்கள் வரி அறவீட்டு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காத்தான்குடி நகரசபை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதனையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து, மட்டக்களப்பு மாநகரசபை தரப்பினரால் காத்தான்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு செய்யப்பட்டது.
சம்பவ இடத்திற்கு சென்ற காத்தான்குடி பொலிஸார் இரு தரப்பினரிடமும் விசாரணைகளை மேற்கொண்டதுடன், இரு தரப்பினரும் தற்காலிகமாக வரி அறவீட்டு நடவடிக்கைகளை நிறுத்துமாறும், இந்த விவகாரம் தொடர்பில் நிர்வாக ரீதியான தீர்மானம் எடுக்கப்பட்ட பின்னர் அறவீட்டை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தினர்.
மேலும், இரு தரப்பினரும் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு வருகைதந்து விடயத்தை கலந்துரையாடுமாறும் பொலிஸார் தெரிவித்தனர். இதனையடுத்து இரு தரப்பினரும் தமது நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து சென்றனர்.


மட்டக்களப்பு மாநகரசபையினால் குறித்த பகுதியில் முறையான வரி அறவீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படாத சந்தர்ப்பங்களில், பொதுமக்கள் காத்தான்குடி நகரசபைக்கு வருமான வரியை செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
நான்கு வருடங்களுக்கும் மேலாக இந்த விவகாரம் தொடர்ந்துவருவதால், இரு உள்ளூராட்சி நிறுவனங்களும் இணைந்து நிரந்தரமான நிர்வாகத் தீர்வொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும், எதிர்காலத்தில் இதுபோன்ற முறுகல் நிலைகள் ஏற்படுவதைத் தவிர்க்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மட்டக்களப்பு மாநகரசபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாக குறித்த இடம் காணப்படுகின்ற நிலையில், அப்பகுதியில் மாநகரசபையின் வட்டார உறுப்பினர்களும் உள்ளதாகவும், இந்நிலையில் காத்தான்குடி நகரசபையினர் வரி அறவீட்டு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பில் நிர்வாக ரீதியான தெளிவு ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் இதன்போது கருத்துகள் தெரிவிக்கப்பட்டன.
இந்த விவகாரம் தொடர்பில் சட்ட ரீதியான நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்து வருவதாகவும், எதிர்காலத்தில் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தெரிவித்தார்.






















