யாழ். வடமராட்சியைச் சேர்ந்த இரசாயனவியல் ஆசிரியர் ஒருவர், பழிவாங்கல் நடவடிக்கை காரணமாக முறையான முன்னறிவிப்பு எதுவும் இன்றி தனது ஊதியம் இடைநிறுத்தப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:-
வடமாரட்சியில் உள்ள பிரபல பாடசாலையில் கல்வி கற்பித்த மேற்படி ஆசிரியருக்கும், அதிகாரிகளுக்கும் இடையில் முரண்பாடு இருந்து வந்துள்ளது.
இதையடுத்து அந்த ஆசிரியர் உரிய காரணங்கள் இன்றி ஏற்கனவே இடைமாற்றம் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிராக அவர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு வழங்கியிருந்தார்.
இந்த முறைப்பாட்டின் மீது இடம்பெற்ற விசாரணைகளின் அடிப்படையில் அந்த ஆசிரியரின் இடமாற்றம் நிறுத்தப்பட்டு முன்னைய பாடசாலையில் கற்பிக்க அனுமதிக்கப்பட்டிருந்தார்.
தற்போது உள்வரும், வெளிச்செல்லும் நேரங்கள் தொடர்பான கையொப்பங்கள் தொடர்பில் சில குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு ஆரம்பவிசாரணைக்காக தற்காலிக அடிப்படையில் அந்த ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட்டு, இன்னொரு பாடசாலைக்கு தற்காலிக இணைப்புச் செய்யப்பட்டுள்ளார்.
எனினும், நிரந்தர சேவையில் உள்ள பாடசாலையூடாகவே ஊதியம் பெறுமாறு அவருக்கு வடமராட்சி வலயக் கல்விப் பணிப்பாளரால் எழுத்துமூலம் அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது.
இவ்வாறான வேதனப்பட்டியலில் கையொப்பம் வைப்பதற்காக நிரந்தர சேவையில் உள்ள பாடசாலைக்குச் சென்றபோது அவருக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதனால், செப்டெம்பர் மாத ஊதியம் அவருக்கு வழங்கப்படாமல் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இதையடுத்தே, அந்த ஆசிரியர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார்.
இருதய அறுவைச்சிகிச்சைக்கு உட்பட்ட மேற்படி ஆசிரியர், தன்னால் நீண்டதூரம் பயணிக்க முடியாத நிலையிலும், அதிகாரிகள் திட்டமிட்டுப் பழிவாங்கி வருகின்றனர் என்று தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.







