மட்டக்களப்பு மாவட்ட கடற்பரப்பில் இடம்பெறும் கடற்கொள்ளைச் சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில், சிறிய மீன்பிடிப் படகுகளுக்கும் அனுமதிச் சீட்டு நடைமுறையை அறிமுகப்படுத்துவதுடன், அவற்றை எளிதில் அடையாளம் காணும் வகையில் படகுகளின் நிறங்களை மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் மட்டக்களப்பு மாவட்ட மீனவர்கள் எதிர்நோக்கும் கடற்கொள்ளை தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் தொடர்பில் கிடைக்கும் முறைப்பாடுகள் அவதானத்துடன் அணுகப்பட்டு வருவதாகவும், கடற்கொள்ளையைத் தடுப்பதற்காக பாதுகாப்புப் படையினருடன் விசேட கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சிறிய படகுகளுக்கான அனுமதிச் சீட்டு மற்றும் தனித்துவமான நிற அடையாள நடைமுறைகள் விரைவில் அமுல்படுத்தப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.
மேலும், கடற்கொள்ளைச் சம்பவங்களில் சில பாதுகாப்புப் படையினரும் தொடர்புபட்டுள்ளதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் உரிய ஆதாரங்களுடன் முன்வைக்கப்பட்டால், அவை தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
VMS கண்காணிப்பு முறைமை தொடர்பில் மீனவர்கள் மற்றும் மீனவர் சங்கங்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதுடன், அவர்களின் நடைமுறைச் சிக்கல்களை கருத்திற்கொண்டு பொருத்தமான தீர்மானம் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.







