கீரிமலை பகுதியில் முன்னர் சுண்ணக்கல் அகழ்வு மேற்கொள்ளப்பட்ட பாரிய பள்ளங்களில் கழிவுகள் கொட்டப்பட்டு வருவதால் ஏற்பட்டுள்ள சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் பாதிப்பை கட்டுப்படுத்த, கழிவுகளை இயந்திரங்களைப் பயன்படுத்தி விரைவாக அகற்றுமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் பணிப்புரை விடுத்துள்ளார்.
கீரிமலையில் கழிவுகள் குவிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேற்று நேரில் பார்வையிட்ட ஆளுநர், அப்பகுதியின் மோசமான நிலைமை குறித்து கவனம் செலுத்தியதுடன், தொடர்ந்து கழிவுகள் கொட்டப்படுவதை அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்தார்.
மனித வளத்தை மாத்திரம் பயன்படுத்தி கழிவுகளை அகற்றும் நடவடிக்கைகள் போதிய வேகத்தில் இடம்பெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய அவர், இயந்திரங்களைப் பயன்படுத்தி துரிதமாக கழிவுகளை அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், எதிர்காலத்தில் அப்பகுதியில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பு கண்காணிப்பு கமராக்களை பொருத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆளுநர் பணித்துள்ளார்.
இதன்போது, வலிகாமம் தெற்கு பிரதேச சபையால் கீரிமலை பகுதியில் குவிக்கப்பட்டுள்ள கழிவுகளை விரைவாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தவிசாளர் தி.பிரகாஸ் தெரிவித்தார்.
அதேவேளை, தெல்லிப்பழை ஆதார மருத்துவமனையிலிருந்து அப்பகுதியில் கொட்டப்பட்டிருந்த மருத்துவக் கழிவுகள் தற்போது அகற்றப்பட்டுள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
கீரிமலை பகுதியில் மக்கள் சுகாதாரத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் கழிவுகள் கொட்டப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டியதன் அவசியத்தையும் ஆளுநர் வலியுறுத்தினார்.








