ஹோர்முஸ் நீர்ச்சந்தி மற்றும் செங்கடல் பிராந்தியத்தில் வர்த்தகக் கப்பல்களின் பாதுகாப்பான, தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக, அமெரிக்கா மற்றும் கூட்டணி நாடுகளுடன் இணைந்து தற்காப்பு அடிப்படையிலான சர்வதேச பாதுகாப்புப் பணியில் பிரான்ஸ் பங்கேற்கத் தயாராக இருப்பதாக ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீர்ச்சந்தியை மீண்டும் திறப்பதற்கான சர்வதேச முயற்சிகளை பிரான்ஸ் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. குறிப்பாக, எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் கொள்கலன் கப்பல்கள் பாதுகாப்பாகச் செல்லும் வகையில் சர்வதேச பாதுகாப்பு ஏற்பாடுகளை உருவாக்குவது தொடர்பில் பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருகிறது.
பிரான்ஸ் வெளியுறவு அமைச்சகத்தின் சமீபத்திய நிலைப்பாட்டின்படி, ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் போக்குவரத்தை மீண்டும் ஏற்படுத்துவதற்கான ஐ.நா. பாதுகாப்புச் சபை தீர்மானம் ஒன்றை உருவாக்கும் பணியிலும் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளது. அதேவேளை, தாக்குதலுக்கு உள்ளாகும் சவுதி அரேபிய எரிசக்தி உள்கட்டமைப்புகளை “முற்றிலும் தற்காப்பு” அடிப்படையில் பாதுகாக்கவும் பிரான்ஸ் முன்வந்துள்ளது.
முன்னதாக ஏப்ரல் மாதம் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா இணைந்து, ஹோர்முஸ் நீர்ச்சந்தியில் வணிகக் கப்பல்களை பாதுகாப்பதற்கான “strictly defensive” (முற்றிலும் தற்காப்பு) பல்தரப்பு சர்வதேசப் பணியை உருவாக்கும் திட்டத்தை அறிவித்திருந்தன. அதன் நோக்கம் வணிகக் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குதல் மற்றும் பாதுகாப்பான சூழல் உருவான பின்னர் கடல் வழித்தடத்தில் கண்ணிவெடிகளை அகற்றுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகும்.








