இலங்கை இராணுவத்தினர் பயணித்த டிஃபெண்டர் (Defender) வாகனம், மன்னார்–தலைமன்னார் பிரதான வீதியில் பனைமரத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இராணுவ சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று (24) இடம்பெற்ற இந்த விபத்து, தலைமன்னாரிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த இராணுவ வாகனம், கிளியன்குடியிருப்பு பகுதியில் கட்டுப்பாட்டை இழந்து வீதியோரத்தில் இருந்த பனைமரத்துடன் மோதியதில் ஏற்பட்டுள்ளது.
வாகனத்தில் பயணித்த 12 இராணுவத்தினரும் பலத்த காயமடைந்த நிலையில், ஆரம்பத்தில் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்போது, காயமடைந்த சிப்பாய் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஏனைய 11 இராணுவத்தினரும் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மன்னாருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, காயமடைந்த இராணுவத்தினரை பார்வையிடுவதற்காக வைத்தியசாலைகளுக்குச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விபத்தில் இராணுவ டிஃபெண்டர் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.







