வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுவடையக்கூடிய அபாயம் காணப்படுவதால், ஆழ்கடல் மீன்பிடிப் படகுகள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதன்படி, வடக்கு அகலாங்கு 10 முதல் 20 வரையிலும், கிழக்கு தீர்க்காங்கு 80 முதல் 95 வரையிலும் அமைந்துள்ள கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே இப்பகுதிகளில் உள்ளவர்கள் பாதுகாப்பான கடற்பரப்புகளை நோக்கி நகருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
வடக்கு அந்தமான் தீவுகளுக்கு அருகிலுள்ள வங்கக்கடல் பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இந்த வானிலைத் தொகுதி இன்று (25) கிழக்கு-மத்திய மற்றும் அதனை அண்மித்த தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக நகர்ந்து, ஆழமான காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் நகரும் இந்தத் தொகுதி, ஒக்டோபர் 26ஆம் திகதி காலை வேளையில் புயலாகவும், ஒக்டோபர் 27ஆம் திகதி காலை மேற்கு-மத்திய வங்கக்கடல் பகுதியில் தீவிர புயலாகவும் வலுப்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளின் சில பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தென்மேற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். திருகோணமலை முதல் காங்கேசன்துறை, புத்தளம், கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம்.
இதனால், குறித்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்புடன் காணப்படுவதுடன், நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கக்கூடும்.
புத்தளம் முதல் கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் 2 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக மணித்தியாலத்துக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், அச்சமயங்களில் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாக மாறக்கூடும்.
எனவே, மீனவர்கள் மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அடுத்தடுத்த வானிலை அறிவிப்புகளை அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.








