பராமரிப்புச் செலவு நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறியதால் 29 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட முஹம்மது அமீன் முஹம்மது நசீமுக்கு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வழங்கிய பொதுமன்னிப்பு செல்லாது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
1.74 மில்லியன் ரூபாய் பராமரிப்புச் செலவைச் செலுத்தத் தவறியதால் 2024 ஜூலையில் சிறையிலடைக்கப்பட்ட நசீம், சிறைவாசிகள் தினத்தை முன்னிட்டு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டார்.
எனினும், குறித்த பொதுமன்னிப்பு சமத்துவத்திற்கான அடிப்படை உரிமையை மீறுவதாகத் தீர்மானித்த உயர் நீதிமன்றம், அதனை இரத்துச் செய்து, அவருக்கான பழைய சிறைத்தண்டனையை மீண்டும் நடைமுறைப்படுத்த உத்தரவிட்டுள்ளது.
அத்துடன், நசீம் உடனடியாக சட்ட அமுலாக்க அதிகாரிகளிடம் சரணடைய வேண்டும் என்றும், அவரைக் கைது செய்வதற்கு ஏற்கெனவே பிறப்பிக்கப்பட்ட பிடியாணை செல்லுபடியாகும் என்றும் நீதிமன்றம் அறிவித்துள்ளது.







