மேற்கு – மத்திய வங்காள விரிகுடா பகுதியில் நிலைகொண்டுள்ள ‘அர்னாப்’ (Arnab) சூறாவளி மேலும் வலுவடைந்து மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (27) அதிகாலை 2.30 மணியளவில், வட அகலாங்கு 15.9° மற்றும் கிழக்கு நெட்டாங்கு 85.4° பகுதிக்கு அருகில் புயலின் மையம் காணப்பட்டதுடன், அது காங்கேசன்துறையிலிருந்து சுமார் 890 கிலோமீற்றர் வடகிழக்கில் நிலைகொண்டிருந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புயலானது இன்று பிற்பகல் 5.30 மணி வரை மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன் பின்னர் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (28) முற்பகல் 11.30 மணியளவில் ஆந்திரப் பிரதேசக் கடற்கரையூடாக இந்தியக் கரையைக் கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயலின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு ஏற்படாது என எதிர்பார்க்கப்பட்டாலும், புயலை நோக்கி ஈர்க்கப்படும் காற்றோட்டம் காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கமைய, மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். குறிப்பாக, சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இதற்கிடையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்கள், அத்துடன் திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடும் என்பதால், பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், சாத்தியமான அனர்த்தங்களிலிருந்து பாதுகாத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.








