குருணாகலில் இன்று காலை பாரிய மரமொன்று முறிந்து வீதியில் விழுந்ததில், வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த 7 வாகனங்கள் சேதமடைந்துள்ளன.
குருணாகல், ரஜ பிஹில்ல பூங்காவிற்கும் ரஜ பிஹில்ல விடுதிக்கும் இடைப்பட்ட வீதியில் இன்று (28) காலை சுமார் 9 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மரம் முறிந்து விழுந்ததில் அதன் கிளைகள் வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது விழுந்துள்ளன. இதனால் குறித்த வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், இந்தச் சம்பவத்தில் எவருக்கும் உயிராபத்தோ காயங்களோ ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தைத் தொடர்ந்து, வீதியில் விழுந்த மரத்தை அகற்றி போக்குவரத்தை வழமைக்குக் கொண்டுவரும் நடவடிக்கைகளில் பொலிஸாரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.
பாரிய மரம் முறிந்து விழுந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.







