களு கங்கை வடிநிலப் பகுதிகளில் தொடர்ந்து பெய்துவரும் மழை காரணமாக, தாழ்வான இடங்களில் சிறிய அளவிலான வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரித்து, நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள எச்சரிக்கையை மேலும் 24 மணிநேரத்திற்கு நீடித்துள்ளது.
நீர்மட்ட அளவீட்டு நிலையங்களில் பதிவாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், அடுத்த 24 மணிநேரத்திற்குள் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தின் பெல்மதுல்ல, நிவித்திகல, இரத்தினபுரி, குருவிட்ட, அயகம மற்றும் எலபத்த ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், களுத்துறை மாவட்டத்தின் இங்கிரிய, ஹொரணை, தொடங்கொட, மில்லனிய, புலத்சிங்கள, மதுராவல மற்றும் பாலிந்தநுவர ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறும், வெள்ள அபாயம் ஏற்படக்கூடிய பகுதிகள் மற்றும் வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் எச்சரிக்கையுடன் செயற்படுமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.








