கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 454 மில்லியன் ரூபாய் சந்தைப் பெறுமதியுடைய கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி போதைப்பொருட்களுடன் 46 வயதுடைய இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (28) இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.
தொழில்முறையில் பொறியியலாளரான குறித்த நபர், கட்டார் ஏர்வேஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான QR 654 என்ற விமானத்தில் பிரான்ஸின் பாரிஸிலிருந்து தோஹா ஊடாக இலங்கைக்கு வந்துள்ளார்.
அவர் கொண்டு வந்த பயணப் பொதிகளைச் சோதனையிட்ட சுங்க அதிகாரிகள், அவற்றிலிருந்து பெருமளவிலான போதைப்பொருட்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக பரிசோதனைகளின் மூலம் மீட்கப்பட்டவை கொக்கைன் மற்றும் எக்ஸ்டசி வகை போதைப்பொருட்கள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவற்றின் மொத்தச் சந்தைப் பெறுமதி சுமார் 454 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட இந்தியப் பிரஜை, மேலதிக விசாரணைகளுக்காக இலங்கை சுங்கத் திணைக்களத்தின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் சுங்க அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








