இலங்கையில் முன்மொழியப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம், தன்னிச்சையான தடுப்புக்காவல்கள் மற்றும் சித்திரவதைகள் உள்ளிட்ட கடுமையான மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுக்கக்கூடும் என சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அந்த அமைப்பு, புதிய சட்டமூலத்தில் உள்ள சில ஏற்பாடுகள் அடிப்படை மனித உரிமைகளுக்குப் பாரிய அச்சுறுத்தலாக அமையக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக, போதிய நீதிமன்ற மேற்பார்வையின்றியும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்கான உரிய ஆதாரங்கள் இன்றியும் சந்தேகநபர்களை நீண்டகாலம் தடுப்புக்காவலில் வைத்திருப்பதற்கு இந்தச் சட்டமூலம் வழிவகுக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொலிஸாரால் பெறப்படும் வாக்குமூலங்களை அடிப்படையாகக் கொண்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்குவதற்கு அனுமதிக்கும் ஏற்பாடுகள், சித்திரவதைகளை ஊக்குவிக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளதாகவும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் எலென் பியர்சன் (Elaine Pearson), இத்தகைய சட்ட ஏற்பாடுகள் பொலிஸாரின் அதிகார துஷ்பிரயோகங்களுக்கும் மனித உரிமை மீறல்களுக்கும் வழிவகுக்கக்கூடும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இந்தச் சட்டமூலம் தற்போதுள்ள வடிவிலேயே நிறைவேற்றப்பட்டால், கடந்த காலங்களில் கடுமையான சட்டங்களின் கீழ் இடம்பெற்றதைப் போன்ற பாரிய மனித உரிமை மீறல்கள் மீண்டும் நிகழும் அபாயம் உள்ளதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.








